ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி பயணம்
3/23/2023 5:43:19 PM
மீனம்பாக்கம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இதேபோல், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் புதுடெல்லிக்கு விரைந்துள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டினால் ஏராளமான பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்யும் மசோதாவை கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அம்மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், பல்வேறு விளக்கங்களை கேட்டிருந்தார். அதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளித்த பிறகும், கடந்த சில நாட்களுக்கு முன் அம்மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அவற்றை ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டால், அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என சட்ட விதி உள்ளது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (23ம் தேதி) சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 10.05 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். தமிழ்நாடு ஆளுநரின் திடீர் டெல்லி பயணம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவார். பின்னர் தேவைப்பட்டால் பிரதமரையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11.20 மணியளவில் விஸ்தாரா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையும் அவசரமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து தமிழ்நாடு ஆளுநரும் தமிழக பாஜ தலைவரும் அவசரமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.