காதலனை பார்க்க எதிர்ப்பு: சிறுமி விஷம் குடித்து தற்கொலை
3/23/2023 5:28:05 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கரடியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் இருந்து வந்தார். இவரும் பர்கூர் அத்திமரத்துப்பள்ளியை சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், அத்திரமரத்துப்பள்ளியை சேர்ந்த உறவுக்கார வாலிபர் தங்கள் மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனை அறிந்த சிறுமி, அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் சிறுமியை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி திடீரென தான் கொண்டு சென்றிருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.