அய்யம்பேட்டையில் ரூ.10 லட்சத்தில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடம்: காஞ்சி கலெக்டர் திறந்து வைத்தார்
3/22/2023 5:46:58 PM
காஞ்சிபுரம் : அய்யம்பேட்டையில் ரூ.10 லட்சம் செலவில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்திகூடத்தை காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1947 உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்திட, மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடம் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கலந்துகொண்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடத்தை திறந்துவைத்தார்.
பின்னர், தொழில் முனைவோர் தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வேர்க்கடலை, எள்ளு மற்றும் தேங்காய் கொள்முதல் செய்து, மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து “காஞ்சி” எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டத்தில் 113 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.