செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை
3/22/2023 5:45:51 PM
சென்னை: செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எக்ஸ்எக்ஸ்பி வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் ஈவிகேஎஸ் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.