பள்ளி ஆசிரியை கொலை கணவனுக்கு போலீஸ் வலை
3/22/2023 5:43:03 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் பள்ளி ஆசிரியையை கொலை செய்து உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள காஞ்சியார் பகுதியை சேர்ந்தவர் விஜேஷ். அவரது மனைவி அனு மோள் (27). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17ம் தேதி வழக்கம் போல் அனு மோள் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மறுநாள் முதல் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து அனு மோளின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து விஜேஷை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அனு மோள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டதாக கூறி உள்ளார்.
இதனால் அனு மோளின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே கட்டப்பனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே நேற்று அனு மோளின் தம்பி அலெக்ஸ் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்தவர் கதவை உடைத்து திறந்து பார்த்தார். அப்போது படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு கம்பளி போர்வையில் அனு மோளின் உடல் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கட்டப்பனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அனு மோளின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் விஜேஷ் தலைமறைவானார். விஜேஷ் தான் மனைவியை கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே அவரை பல்வேறு இடங்களிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.