அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 24 பேரிடம் ரூ.1.25 கோடி மோசடி: மின்ஊழியர் கைது
3/21/2023 6:03:35 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம்பாளையத்தை சேர்ந்த கோபால் (58). இவர், ஆனந்தம்பாளையம் பால் சொசைட்டியில் செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகனசுந்தரம் (27). எலக்ட்ரீசியனாக உள்ளார். கோபாலுக்கு அவரது பக்கத்து ஊரான சிங்கம்பேட்டையை சேர்ந்த மூர்த்தி (45) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. மூர்த்தி, பூனாச்சியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார். அப்போது கோபாலிடம் மின்சார வாரியத்தில் தலைமை அதிகாரிகள் தனக்கு பழக்கம் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உங்கள் மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி விடலாம் என மூர்த்தி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கோபால், 2018ம் ஆண்டு அவரது மகன் மோகனசுந்தரத்திற்கு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக ரூ.7 லட்சத்தை முதற்கட்டமாக வழங்கினார். தொடர்ந்து, வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் 10 லட்சம் ரூபாயை கோபால் மூர்த்தியிடம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து மூர்த்தி வேலை உறுதியாகிவிட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.17.50 லட்சத்தை பெற்றுள்ளார். பின்னர், கோபால் வீட்டின் முகவரிக்கு அவரது மகன் மோகனசுந்தரம் பெயரில் தபால் வந்தது. அந்த தபாலில் மோகனசுந்தரத்திற்கு மின்சார வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்டதைபோல பணி நியமன ஆணை இருந்தது. அந்த பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு கோபாலும், மோகனசுந்தரமும் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் சென்று அதிகாரிகளிடம் காண்பித்துள்ளனர். அங்கிருந்த அதிகாரிகள் அந்த பணி நியமன ஆணை போலி என கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்து கோபாலும், மோகனசுந்தரமும் மூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அதற்கு மூர்த்தி முறையாக பதில் அளிக்காமல் தலைமறைவாகி விட்டார். கோபால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அக்கம்பக்கம் விசாரித்தபோது, அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார் (31), அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (27) ஆகியோரும் மின்வாரியத்தில் கணக்காளர், உதவியாளர் பணிக்காக மூர்த்தியிடம் தலா ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மூர்த்தியிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், மின் ஊழியரான மூர்த்தி, மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து, போலி நியமன ஆணையை வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளாக தலைமறைவான மூர்த்தியை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.