திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபரிடம் ரூ.2.23 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது
3/21/2023 6:01:35 PM
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் எம்.பி.ஏ. படித்து முடித்து வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தொடர்பு கொண்டார். அவர் இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். பின்னர், தனக்கு வேலை கிடைத்துள்ளதாகவும், அதற்கு ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 900 செலுத்த வேண்டும் எனவும், இத்தொகையை அனுப்பி உதவுமாறும் அப்பெண் கூறினார். இதை உண்மை என நம்பிய இளைஞர் இணையவழி மூலம் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 900ஐ அப்பெண்ணுக்கு அனுப்பினார். அதன் பிறகு இளைஞரின் அழைப்புகளை அப்பெண் தவிர்த்து வந்தார்.
இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், பெங்களூருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சர்மிளா (27), தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த சுகுமார் மகள் ஐஸ்வர்யா (32) ஆகியோர் இணைந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் கிளை சிறையில் அடைத்தனர்.