மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதல்: டெல்லியை பழிதீர்க்குமா பரிதாப ஆர்சிபி?
3/13/2023 5:55:09 PM
மும்பை: 5 அணிகள் பங்கேற்றுள்ள முதல் மகளிர் பிரிமீயர் லீக் டி.20 தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 10வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் அலிசா ஹீலி 58 (46பந்து), தஹ்லியா மெக்ராத் நாட்அவுட்டாக 50 ரன் எடுத்தனர். மும்பை பவுலிங்கில் சாய்கா இஷாக் 3, அமெலியா கெர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் யாஸ்திகா பாட்டியா 42, ஹெய்லி மேத்யூசும் 12 ரன்னில் வெளியேறிய நிலையில், நாட்அவுட்டாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 53 ரன் (33 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாட் சிவெர் 45 ரன் (31 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்)எடுக்க 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் எடுத்த மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தொடர்ச்சியாக 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 4வது ஆட்டத்தில் உ.பி. 2வது தோல்வியை சந்தித்தது.
கவுர் ஆட்டநாயகி விருது பெற்றார். இன்று இரவு 7.30 மணிக்கு டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடக்கும் 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி 4 போட்டியில் 3 வெற்றியை பெற்றுள்ள நிலையில் பெங்களூரு 4 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் கடந்த 5ம் தேதி மோதிய போட்டியில் டெல்லி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இன்று பதிலடி கொடுத்து பெங்களூரு முதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.