மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ்-ஆர்சிபி இன்று இரவு மோதல்
3/15/2023 5:45:27 PM
மும்பை: 5 அணிகள் பங்கேற்றுள்ள முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 51 (30பந்து), யாஸ்திகா பாட்டீயா 44 (37பந்து) ரன் அடித்தனர். 20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. குஜராத் பவுலிங்கில் கார்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 107 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 55 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 20, கேப்டன் சினே ராணா 20 ரன் அடித்தனர். மும்பை பவுலிங்கில், மேத்யூஸ், சீவர் பூருண்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மும்பை கேப்டன் கவுர் ஆட்டநாயகி விருது பெற்றார். தொடர்ந்து 5வது வெற்றியை பெற்ற மும்பை முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. குஜராத் 4வது தோல்வியை சந்தித்தது.
இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 13வது லீக் போட்டியில் உபி. வாரியர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. உ.பி. 4 போட்டியில் 2 வெற்றி,2 தோல்வி அடைந்துள்ளது. இன்று 3வது வெற்றிக்காக களம் இறங்குகிறது. மறுபுறம் மந்தனா தலைமையிலான பெங்களூரு 5 போட்டியிலும் தோற்று பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டநிலையில் மீதமுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றிக்காக போராடும். இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் உ.பி. 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.