உ.பி.யை வீழ்த்தி பைனலுக்கு தகுதி எங்களிடம் சிறப்பான பந்துவீச்சு தாக்குதல் உள்ளது: மும்பை கேப்டன் கவுர் பேட்டி
3/25/2023 5:54:56 PM
மும்பை: முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடரில், மும்பையில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஆட்டம் இழக்காமல் 72 (38 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), அமெலியா கெர் 29 ரன் (19பந்து), ஹீலே மேத்யூஸ் 26 ரன் அடித்தனர்.
பின்னர் 183 ரன் இலக்குடன் களம் இறங்கிய உ.பி. வாரியர்ஸ் 17.4 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 72 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. உ.பி. அணியில் அதிகபட்சமாக கிரண் நவ்கிரே 43 ரன் எடுத்தார். மும்பை பவுலிங்கில் இசி வோங் 13 ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4, சைகா இஷாக் 2 விக்கெட் வீழ்த்தினர். நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஆட்டநாயகி விருது பெற்றார். வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ”எங்களிடம் ஒரு கண்ணியமான பந்துவீச்சு தாக்குதல் உள்ளது, யார் வேண்டுமானாலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்.
வோங் பந்துவீசுவதில் எப்போதும் உற்சாகமாக இருப்பார். மேலும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் எந்த விளையாட்டிலும் எங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடியவர், இன்று அவர் அதைச் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட ஆர்வமுள்ள சில இளம் பெண்கள் எங்களிடம் உள்ளனர், அவர்கள் நேர்மறையான ஆற்றல் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் வேலையைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள், கேட்கத் தயாராக இருக்கிறார்கள் என்றார். நாளை இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதி போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்சுடன் மும்பை பலப்பரீட் சை நடத்த உள்ளது.