மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று கிளைமாக்ஸ் முதல் சாம்பியன் மகுடத்திற்கு டெல்லி-மும்பை பலப்பரீட்சை: ரூ.6 கோடி பரிசுத்தொகை யாருக்கு?
3/26/2023 5:13:54 PM
மும்பை: 5 அணிகள் பங்கேற்ற முதல் மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடரில் கிளைமாக்ஸ் இன்று நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக்லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் மோதுகின்றன. மும்பை முதல் 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு ஆதிக்கம் செலுத்தியது.
அதன் பிறகு 2 ஆட்டங்களில் தோற்று சற்று சரிவை சந்தித்த அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் உ.பி. வாரியர்சை வீழ்த்தியது. பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 244, விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா 210 ரன் அடித்துள்ளனர். பந்து வீச்சில் சாய்கா இஷாக் 15, அமெலி கெர் 13, இசி வோங் 12 விக்கெட் எடுத்துள்ளனர். ஆல்ரவுண்டராக நாட் சிவெர் 272 ரன்னுடன் 10 விக்கெட், ஹெய்லி மேத்யூஸ்சும் 258 ரன் மற்றும் 13 விக்கெட் எடுத்து வலு சேர்த்துள்ளனர். மறுபுறம் டெல்லி அணி லீக் சுற்றில் 5 வெற்றிகளுடன் நேரடியாக பைனலுக்குள் நுழைந்தது.
கேப்டன் மெக் லானிங் 310, ஷபாலி வர்மா 241 ரன் விளாசி உள்ளனர், பந்து வீச்சில் ஷிகா பாண்டே 10, ஜெஸ் ஜோனசென் 8, தாரா நோரிஸ்சும் 7 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆல்ரவுண்டர் மரிஜானே காப், அலிஸ் கேப்சியும் வெற்றிக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர். லீக் சுற்றில் மோதிய இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் மும்பை 8 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றன. இன்று வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.