ஷாருக்கானின் மகனை கைது செய்த ஐஆர்எஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது
3/13/2023 6:02:42 PM
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் வழக்கில் கைது செய்த மும்பை போதைப் ெபாருள் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஆர்எஸ் (இந்திய வருவாய் சேவை) அதிகாரி சமீர் வான்கடேவின் வாழ்க்கை குறித்த சினிமா தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று படமான ‘மை அடல் ஹூன்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜீஷான் அகமது மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து, சமீர் வான்கடேவின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்க உள்ளனர். திரைக்கதை எழுதும் பொறுப்பு தீபக் கிங்ரானிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் முடிந்ததும், படத்திற்கான நடிகர்கள் தேர்வு பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டில் யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற சமீர் வான்கடே, முதன்முதலில் மும்பையில் ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர்போன சமீர் வான்கடே, ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை நடத்தி ரூ.1700 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை மீட்டதுடன், போதைப்பொருள் வழக்கில் பல பாலிவுட் பிரபலங்களையும் கைது செய்தார். அதனால் பாலிவுட், அரசியல் பிரபலங்களுக்கு மத்தியில் சமீர் வான்கடே குறித்த அச்சம் இன்றும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.