டி.20 போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கன் அசத்தல் வெற்றி
3/25/2023 5:56:18 PM
சார்ஜா: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டி.20 போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சதாப் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாபர் அசாம், ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை கொண்ட பாகிஸ்தான் 20 ஓவரில், 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களே எடுத்தது.
அதிகபட்சமாக இமாத் வாசிம் 18, சைம் அயூப் 17, தயுப் தாஹிர் 16 ரன் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பவுலிங்கில், பசல்ஹக் பாரூக்கி, முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் இழக்காமல் 38 ரன் எடுத்த முகமதுநபி ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
டி.20 கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது. இதற்கு முன் மோதிய 3 போட்டிகளிலும் பாகிஸ்தானே வென்றிருந்தது. இந்த வெற்றி மூலம் 1-0 என ஆப்கன் முன்னிலை வகிக்க 2வது போட்டி நாளை நடக்கிறது.