கூடுதலாக 16 அணிகள் சேர்ப்பு: 2026 பிபா உலக கோப்பை கால்பந்தில் 48 அணி பங்கேற்பு
3/15/2023 5:47:18 PM
துபாய்: உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் நடந்த 22வது உலக கோப்பை கால்பந்து தொடரில் இறுதிபோட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடரை 2026ம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளதாக பிபா அறிவித்துள்ளது.
வழக்கமாக 32 அணிகள் பங்கேற்கும் நிலையில் கூடுதலாக 16 அணிகள் சேர்க்கப்பட உள்ளது. இந்த 48 அணிகள் தலா 4 அணிகள் என 12 குழுவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 அணி என 24 அணிகள் நேரடியாக நாக்அவுட் சுற்றுக்கு நுழையும். 3வது இடம் பிடிக்கும் சிறந்த 8 அணிகளும் நாக்அவுட் சுற்றுக்கான 24 அணிகளுடன் சேரும். இதன் மூலம் போட்டிகளின் எண்ணிக்கையும் 64ல் இருந்து 104ஆக உயரும். மேலும் 2026 உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் மிக நீளமானதாக மாறும்.