மகளிர் ஐபிஎல் டி 20 போட்டி; ஷபாலி அதிரடியில் டெல்லி அபார வெற்றி: மும்பை-உ.பி. வாரியர்ஸ் இன்று மோதல்
3/12/2023 5:10:53 PM
மும்பை: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4 ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9வது லீக் போட்டி நேற்றிரவு மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் சீட்டு கட்டுகளைப்போல் விக்கெட்டுகள் சரிந்தன. முன்னணி வீராங்கனைகள் யாரும் சோபிக்காததால் குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக கிம் கார்த் அவுட் ஆகாமல் 32 ரன்கள் எடுத்தார் டெல்லி தரப்பில் மரிசான் கேப் 5 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஷபாலிவர்மா, மெக் லானிங் இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
குறிப்பாக ஷபாலிவர்மா ஆட்டத்தில் அனல் பறந்தது. 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த தொடரில் அவர் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். இறுதியில் 7.1 ஓவர்களில் டெல்லி அணி 107 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது. மெக் லானிங் 21 ரன்களுடனும் (15 பந்து, 3 பவுண்டரி), ஷபாலி வர்மா 76 ரன்களுடனும் (28 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 5 விக்கெட் எடுத்த டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மரிஜானே காப் ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த தொடரில் 4 போட்டிகளில் ஆடி உள்ள டெல்லி அணிக்கு இது 3-வது வெற்றி ஆகும். குஜராத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 10வது லீக் போட்டியில் உ.பி.வாரியர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருக்கிறது. உ.பி. வாரியர்ஸ் 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மும்பையின் சவாலை உ.பி. எதிர்கொண்டு புள்ளி பட்டியலில் உயரம் அடைய முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.