கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட்; டேரில் மிட்செல் 102, மேட் ஹென்றி 72 ரன் விளாசல்: நியூசிலாந்து 373 ரன் குவித்து ஆல்அவுட்
3/11/2023 5:46:20 PM
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து -இலங்கை அணிகள் இடையே 2 போட்டி கொ ண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 92.4 ஓவரில் 355 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் டோவன் கான்வே 30, கேன் வில்லியம்சன் 1, ஹென்றி நிகோல்ஸ் 2, டாம் லாதம் 67 டாம் பிளன்டெல் 7 ரன்னில் அவுட் ஆகினர். நேற்றைய 2ம்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 63 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 40, மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்னில் களத்தில் இருந்தனர்.
3வது நாளான இன்று பிரேஸ்வெல் 25 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சவுத்தி 25 ரன்னில் கேட்ச் ஆக, டேரில் மிட்செல் சதம் விளாசினார். டெஸ்ட்டில் இது அவருக்கு 5வது சதம் ஆகும். பின்னர் அவர் 102 ரன்னில் (193 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார். கடைசி நேரத்தில் மேட்ஹென்றி அதிரடியாக 75 பந்தில், 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்னும், நீல் வாக்னர் 24 பந்தில் 27 ரன்னும் அடிக்க நியூசிலாந்து முன்னிலை பெற்றது. முடிவில் 107.3 ஓவரில் 373 ரன்னுக்கு நியூசிலாந்து ஆல்அவுட் ஆனது.
இலங்கை பவுலிங்கில், அசித்த பெர்னாண்டோ 4, லஹிரு குமாரா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 18 ரன் பின்தங்கிய நிலையில் இலங்கை 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான கேப்டன் கருணாரத்னே 17 ரன்னிலும், ஆஷாடா பெர்னாண்டோ 28 ரன்னிலும் பிளேர் டிக்னர் பந்தில் அவுட் ஆகினர். 27 ஓவரில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன் எடுத்திருந்தது. மேத்யூஸ் 13, குசால் மெண்டிஸ் 8 ரன்னில் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில், இலங்கை 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.