ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நாளை தொடக்கம்: கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா
3/8/2023 6:36:10 PM
அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட ஆலன்பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட்தொடர் நடந்து வருகிறது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சிஅளித்தது. தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்ட் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நாளைதொடங்குகிறது.
டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு தகுதிபெற வேண்டுமெனில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இந்தியா களம் இறங்குகிறது. இந்த தொடரில் இதுவரை சதம்அடித்த ஒரே வீரர் ரோகித்சர்மா தான். அக்சர் பட்டேல் 2 அரைசதம் உள்ள 185 ரன் அடித்துள்ளார். விராட் கோஹ்லி, 111, ஜடேஜா 107, புஜாரா 98 ரன் எடுத்துள்ளனர். கோஹ்லியின் பார்ம் மோசமாக உள்ளது. அவர் கடந்த 15 டெஸ்ட்டில் ஒருசதம் கூட அடிக்கவில்லை.
மொத்தம் 683 ரன்களே எடுத்துள்ளார். சராசரி 26.26 என மோசமாக உள்ளது. இவர்களுடன் ஸ்ரேயாஸ் அய்யரும் ரன் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடந்த டெஸ்ட்டில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக களம் இறங்கிய கில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் அவர் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வார். விக்கெட் கீப்பர் பரத்தும் 3 டெஸ்ட்டில், 57 ரன்களே எடுத்துள்ளதால் இஷான்கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் பரத் மீது அணி நிர்வாகம் இன்னும்நம்பிக்கை வைத்துள்ளது. பவுலிங்கில் ஜடேஜா 21 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 18 விக்கெட் எடுத்துள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இருப்பினும் பவுலிங்கில் பெரிய மாற்றம் இருக்காது. பந்துவீச்சில் முகமது சிராஜ்க்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுகிறார்.
மறுபுறம் ஆஸ்திரேலியா இந்தூரில் வெற்றி பெற்றது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பேட்டிங்கில் கவாஜா (153ரன்), லாபுசேன்(178), ஹேண்ட்ஸ்கோம்ப் (128) டிராவிஸ் ஹெட் (113) ஆகியோர் 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாயாரை பார்க்கசென்ற கம்மின்ஸ் இன்னும் திரும்பாததால் ஸ்டீவன் ஸ்மித் தான் இந்த டெஸ்ட்டிலும் அணியை வழிநடத்த உள்ளார்.
பவுலிங்கில் நாதன் லயன் முதல் டெஸ்ட்டில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் அடுத்த 2 டெஸ்ட்டுகளில் விக்கெட்டுகளைஅள்ளினார். அவர் இதுவரை 19 விக்கெட் எடுத்துள்ளார். இவருடன் சேர்ந்து டாட் மர்பி (11), மேத்யூ குஹ்னெமன் (8 விக்கெட்) இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி நாளை எந்த மாற்றமும் இன்றி களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும்இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.
இரு அணிகளும் நாளை டெஸ்ட்டில் 106வது முறையாக களம்இறங்குகிறது. இதற்கு முன் மோதிய 105 டெஸ்ட்டில் இந்தியா 32, ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் வென்றுள்ளன. 28 போட்டி டிராவில் முடிந்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இதுவரை 55 போட்டியில் மோதியதில் இந்தியா 24, ஆஸ்திரேலியா 20வென்றுள்ளது. 11 போட்டிடிராவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மைதானம் எப்படி?: அகமதாபாத் ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 14 டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் 6ல் வென்றுள்ளது. 2ல் தோல்வி (1983ல் வெஸ்ட்இண்டீஸ், 2008ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக) கண்டுள்ளது. 6 டெஸ்ட் சமனில் முடிந்துள்ளது. கடைசியாக இங்கு இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய 3 டெஸ்ட்டிலும் இந்தியா வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் முதன்முறையாக இங்கு டெஸ்ட்டில் ஆட உள்ளது. இலங்கைக்கு எதிராக இங்கு இந்தியா 2009ல், 760/7 ரன் எடுத்தது தான் அதிகபட்சமாகும். குறைந்த பட்சமாக தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 2008ல் 76 ரன்னில் இந்தியா சுருண்டுள்ளது.
தற்போதைய பயிற்சியாளர் டிராவிட் இங்கு 7 டெஸ்ட்டில் 3 சதத்துடன் 771ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். பவுலிங்கில் கும்ப்ளே 7 போட்டியில் 36 விக்கெட் எடுத்துள்ளார். அக்சர் பட்டேல் 2 டெஸ்ட்டில் 20 விக்கெட் எடுத்திருக்கிறார். இந்த டெஸ்ட்டிற்கு அகமதாபாத் மைதானத்தில் கருப்பு மற்றும் சிவப்பு மண் ஆகிய இரண்டு வகையான பிட்சுகளும் அமைக்கப்பட்டுள்ளன. எந்த வகையான டிராக்கில் டெஸ்ட் விளையாடப்படும் என்பது இன்று முடிவு செய்யப்படும்.
சதம், இரட்டை சதத்தை எதிர்பார்க்க முடியாது: இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டி: இந்தூர் ஆடுகளத்தை ஐ.சி.சி. போட்டி நடுவர் மோசமானது என்று மதிப்பிட்டுள்ள விவகாரத்திற்குள் நான் செல்லமாட்டேன். சில நேரங்களில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்காக இது போன்ற முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளங்களில் விளையாட வேண்டி உள்ளது. பெரும்பாலான நாடுகள் இதைத்தான் விரும்புகின்றன. இதுபோன்ற ஆடுகளங்களில் அணியில் ஒரு வீரர் சிறப்பாக ஆடினாலும் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும். அதற்கு நாக்பூர் டெஸ்டில் ரோகித் சர்மாவின் (120 ரன்) செயல்பாடே சாட்சி. அது மட்டுமின்றி இது போன்ற கடினமான ஆடுகளங்களில் இரட்டை சதத்தையோ, சதத்தையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் 50-60 அல்லது 70 ரன் எடுத்தாலே இத்தகைய சூழலில் அது சிறந்த ஸ்கோராக இருக்கலாம், என்றார்.
முதல்நாள் ஆட்டத்தை காணும் பிரதமர்கள்: அகமதாபாத் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் போலீசார் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.