மகளிர் பிரீமியர் டி 20 லீக் போட்டி; ஆர்.சி.பி.யை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி: இன்று டெல்லி-உ.பி. மோதல்
3/7/2023 6:07:10 PM
மும்பை: மகளிர் பிரிமீயர் டி20 லீக் போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் நேற்று மோதின. முதலில் களமிறங்கிய ஆர்சிபி மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா 23 (17), டிவைன் 16 (11) ஆகியோர் சோபிக்கவில்லை. தொடர்ந்து திஷா கசத் 0 (2), எல்லிஸ் பெர்ரி 13 (7), அதிரடி வீராங்கனை க்நைட் 0 (1) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டுவதே சந்தேகம் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில் வீராங்கனை ரிச்சா கோஷ் 28 (26), கனிகா அனுஜா 22 (13), ஸ்ரீயங்கா படேல் 23 (15), மகன் சுட் 20 (14) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதால், ஆர்சிபி அணி 18.4 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை அணியின் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். இதையடுத்து இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹெய்லி மேத்யூஸ் 77 (38), யாஷ்டிகா பேடியா 23 (19), நாட் சீவர் பர்ன்ட் 55 (29) ஆகியோர் அடுத்தடுத்து அபாரமாக ஆடினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 159 ரன்களை சேர்த்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
முதல் போட்டியில் குஜராத்திற்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற்றிருந்தது. போட்டியில் 3 விக்கெட் மற்றும் 77 ரன்களையும் குவித்த ஹெய்லி மேத்யூஸுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள்மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.