இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு தகுதி
3/3/2023 7:41:32 PM
இந்தூர்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்து வந்தது.இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 76.3 ஓவரில் 197 ரன் எடுத்துஆல்அவுட் ஆனது. இந்திய பவுலிங்கில் ஜடேஜா 4, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 88 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 60.3 ஓவர்களில் 163 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார்.இதைத்தொடர்ந்து 76 ரன்னை வெற்றி இலக்காக கொண்டு 3வது நாளான இன்று ஆஸ்திரேலியா களம் இறங்கியது.
முதல் ஓவரில் கவாஜாவை அஸ்வின் அவுட் ஆக்கிய நிலையில், சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. லபுஷேனும், ஹெட்டும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். 18.5 ஓவரில் 1 விக்கெட் மட்டும் இழந்து 78 ரன் எடுத்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாதன் லயன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் ஜூன் மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிற்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. முதல் 2 டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4வதுமற்றும் கடைசி டெஸ்ட் வரும் 9ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது.இந்த டெஸ்ட்டில் இந்தியா டிரா செய்தால் கூட டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்யலாம்.