கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் மகளிர் ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: முதல் போட்டியில் மும்பை-குஜராத் மோதல்
3/3/2023 7:29:12 PM
மும்பை: பிசிசிஐ சார்பில் ஐபிஎல் போன்று மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூபிஎல்) டி.20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ், உபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் களம் இறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இதில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். 2 மற்றும் 3வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் வெற்றிபெறும் அணி 2வது அணியாக பைனலுக்குள் நுழையும்.
மார்ச் 21ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. எலிமினேட்டர் போட்டி மார்ச் 24ம் தேதியும் இறுதி போட்டி 26ம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதி போட்டி உள்பட மொத்தம் 22 போட்டிகள் நடக்கிறது. போட்டிகள் தினமும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் மும்பை டிஒய்.பாட்டீல், பிரபோர்ன் ஸ்டேடியங்களில் நடக்கிறது.நாளை இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக பிரமாண்ட தொடக்க விழா நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகைகள் கியரா அத்வானி, கீர்த்தி சனோன் பங்கேற்று நடனமாடுகின்றனர். மேலும் மகளிர் ஐபிஎல்க்காக தீம் மியூசிக்கும் வெளியிடப்படுகிறது. இதனிடையே மகளிர் ஐபிஎல்லுக்கான டிக்கெட் விலையை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி டிக்கெட் விலை ரூ.100ல் இருந்து தொடங்குகிறது. மேலும் சிறுவர்கள், பெண்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. போட்டிகள் அனைத்தையும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.