மார்பக புற்றுநோயால் தாயார் சீரியஸ்: 4வது டெஸ்ட், ஒரு நாள் தொடரில் இருந்தும் கம்மின்ஸ் விலகல்
2/27/2023 6:38:43 PM
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்த நிலையில், 3வது டெஸ்ட் இந்தூரில் நடைபெற உள்ளது. கடைசி டெஸ்ட் அகமதாபாத்திலும், தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளிலும் ஆட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 2வது டெஸ்ட்டில் தோல்வி அடைந்த மறுநாளில் அவசரமாக நாட்டிற்கு திரும்பி சென்றார். அவர் 3வது டெஸ்ட்டில் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. கம்மின்சின் தாய் மரியா, நீண்ட காலமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார். இதனால் குடும்பத்துடன் இருக்க கம்மின்ஸ் முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக இந்திய தொடரில் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கமாட்டார். ஐபிஎல் தொடரிலும் அவர் ஆடப்போவதில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. அவரின் விலகல் ஆஸி. அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.