திருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை
6/24/2019 3:12:44 PM
திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னார் (36). இவர் திருப்போரூர் அருகே காலவாக்கத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஸ்டீல் கதவுகள், இரும்பு கிரில் கேட்கள் செய்யும் வெல்டிங் கடை வைத்துள்ளார். தினமும் காலை 9 மணிக்கு திறந்து மாலை 7 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று விடுவார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. இன்று காலை 7 மணியளவில் மன்னாருக்கு சொந்தமான வெல்டிங் கடையின் முன் பக்கத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து கடைக்காரர் போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே மன்னார் விரைந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் அவரது கடையின் கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். அவரது கடையை ஒட்டி இருந்த சத்திய நாராயணன் என்பருக்கு சொந்தமான கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த கேஸ் வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர், கேஸ் கட்டிங் டார்ச் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர் என்பது தெரிந்தது.
இதுகுறித்து திருப்போரூர் போலீசில் சத்திய நாராயணன் புகார் செய்தார். எஸ்.ஐ. ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மன்னாரின் வெல்டிங் கடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்டிங் மெஷின்கள், காப்பர் வயர்களும், அக்டோபர் 28ம் தேதி ஒன்றரை லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, சத்தியநாராயணன் கடையில் வெல்டிங் மெஷன்கள் திருடப்பட்டது. தொடர் திருட்டு சம்பவம் து அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்ட கேமராக்களை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் முகத்தை லுங்கியால் மூடிக்கொண்டு, கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு இரும்பு கம்பியால் கேமராக்களை உடைப்பது பதிவாகி உள்ளது.