அழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு
6/24/2019 3:12:06 PM
ஆவடி: அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்தபிறகு திருமணம் செய்ய மகன் மறுத்ததால் விரக்தியடைந்த போலீஸ் எஸ்ஐ தற்கொலை செய்துகொண்டார். ஆவடி டி.ஆர்.ஆர் நகர், தனலட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இருதயராஜ் (59). இவர் ஓய்வுப்பெற்ற போலீஸ் எஸ்ஐ. இவரது மனைவி வியகுலமாரி (53). இவர்களது மகன் பால் மேத்யூ (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் 11ம் தேதி பால் மேத்யூவிற்கும் காஞ்சிபுரத்தை சார்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவந்தனர்.
நேற்று காலை பால் மாத்யூ பெற்றோரிடம், ‘’தனக்கு திருமணம் வேண்டாம்’’ என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ‘’ உனது திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோமே, திடீரென திருமணம் வேண்டாம் என்றால் அசிங்கமாக இருக்காதா, உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? என்று கேட்டுள்ளனர். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு படுக்கை அறைக்கு சென்ற இருதயராஜ், கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த மனைவி, உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.