எண்ணூரில் தொடரும் கொள்ளை சம்பவம்
6/24/2019 3:08:09 PM
திருவொற்றியூர்: எண்ணூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடரும் கொள்ளை, வழிப்பறி சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். திருவொற்றியூர் விம்கோ நகர், ராஜிவ் காந்தி தெருவை சேர்ந்தவர் ராஜன் (45). அதே பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அன்று மாலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இதுகுறித்து எண்ணூர் போலீசில் ராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடுபோன பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இதே தெருவில் 4 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் எண்ணூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோல் அடுத்தடுத்து கொள்ளை, வழிப்பறி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.