தொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்
6/24/2019 3:11:25 PM
திருவள்ளூர்: தொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் சுற்றுசூழல் மாசு கட்டுப்பாடு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ஆல்வின் ஜெ.ஆனந்த் வரவேற்றார். அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றினர். இதில் காக்களுர், திருமுல்லைவாயல், திருமழிசை, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள முனைவோர்கள், தங்களது குறைகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில், ‘திருவள்ளூர் மற்றும் காக்களூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று, அவர்களது பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.சாண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எம்.சாண்ட் எவ்வளவு தேவைபட்டாலும் சப்ளை செய்வதற்கு உத்தரவு அளிக்கப்படும். எனவே மணலை விட எம் சாண்ட் நன்றாக உள்ளதால் மக்கள் அதை பயன்படுத்தி கொள்ளவேண்டும். சுற்று சூழலுக்கு உகந்த வகையில் தொழிற்சாலைகளில் அரசு செலவில் மரங்களை நட்டு தருவதற்கு அரசு தயாராக உள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பி.பலராமன், பி.எம்.நரசிம்மன், கே.எஸ்.விஜயகுமார், இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் ம.மனோகரன், மாவட்ட தொழில் பயிற்சி மைய பொது மேலாளர் ரவி கலந்து கொண்டனர்.