காஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்
6/24/2019 3:12:26 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் ஜூலை 1ம் தேதி அத்திவரதர் உற்சவம் தொடங்கி, 48 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள காசிகுட்டை என அழைக்கப்படும் திருக்குளத்தில் கடை மற்றும் வீடுகளின் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.
அத்திவரதர் உற்சவத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் நிலையில், அசுத்தமான குளத்தை பார்த்தால் முகம்சுளிக்கும் நிலை ஏற்படும். எனவே, காஞ்சிபுரம் தன்னார்வலர்கள் குழுவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து குளத்தின் ஒரு பகுதியை சுத்தப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், “குளத்தை சுத்தப்படுத்தும் பணி விரைவில் நிறைவுபெறும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க குளங்களை சுத்தம் செய்ய வேண்டும். இதை முன்மாதிரியாக எடுத்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும்” என்றனர்.