சென்னையில் 30ம் தேதி உயர்மட்டக் குழு கூட்டம்... ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டத்துக்கு ஆயத்தம்
6/24/2019 3:06:36 PM
திருச்சி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு இன்னும் விலக்கி கொள்ளாததால் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதா என முடிவெடுக்க ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கிறது என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், அன்பரசு கூறினர். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது: ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கிறது. அரசு வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை, ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தற்போதைய அரசும், பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அரசு பள்ளிகளில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்காமல் உள்ளனர். இவற்றை சரி செய்ய வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் ரத்து செய்யவில்லை. இதன் விளைவாக தற்போது ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. ஜூனியர்களுக்கு அரசு பதவி உயர்வு வழங்கி பழிவாங்குகிறது. இதனால் பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் இழப்புகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்க முடியாது. இதுதொடர்பாக பேசி முடிவெடுக்க வரும் 30ம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அரசு எங்களை அழைத்து பேசி சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என உயர்மட்ட குழுவில் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.