‘சேதாரம்’ தவிர்க்க தொண்டர்களுக்கு ‘செய்கூலி’ திருவள்ளூர் தொகுதியில் ஆளும் கட்சியினர் தீவிரம்
2/28/2019 3:19:27 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த பி.வேணுகோபால் எம்பியாக உள்ளார். எம்பி சம்பளம், தொகுதி வளர்ச்சி நிதி என பெற்று பலரிடம் கை குலுக்கியது, விழாக்களில் சால்வை, கிரீடம், கேடயம், மாலை, மரியாதை என பலவித சுகங்களை அனுபவித்தார். வரும் தேர்தலிலும் வாய்ப்பு கிடைத்தால், மேலும் 5 ஆண்டுகள் சுகபோகமாக இருக்கலாமே என்பது அவரது கனவு.
அதேவேளையில், இதுவரை உழைத்தது போதும், இனியாவது சுகமாக இருக்க வேண்டும், அதற்கு எப்படியாவது எம்பி சீட் வாங்கி விட வேண்டும் என அதே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே கட்சியினரை கவர தற்போது வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் அதிமுகவினரை சேர்க்க, விண்ணப்பங்களை பெற்று ரூ.2 ஆயிரம் வழங்க அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். அங்கிருந்து பரிந்துரைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு ஆளுங்கட்சியின் கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளிடம் இருக்கும் அதிருப்தியை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆளும் கட்சியினர் கூறுகையில், ‘கட்சி, கொடி, தலைவர் என பெயர்களை சொன்னாலே உற்சாகம் பீறிட்டு பசி, உறக்கத்தை மறந்து சொந்த காசை செலவழித்து தொண்டர்கள் கட்சி பணியாற்றிய காலம் மலையேறிவிட்டது. இப்போது ‘செய்கூலி’ இல்லாமல் தொண்டர்களை வேலைவாங்க நினைத்தால், தேர்தல் வெற்றி ‘சேதாரம்’ ஆகிவிடும். எனவே, பத்தும் செய்யும் பணத்தை இப்போதே தொண்டர்களுக்கு வழங்கினால்தான், இந்த தேர்தலில் பம்பரமாக சுழன்று வேலை செய்வார்கள்’ என்றனர்.