அதிமுக பிரமுகர்களுக்கு தொடர் விபத்து பாஜ, பாமக கூட்டணியால் நேரம் சரியில்லை
2/28/2019 3:09:57 PM
திருச்சி: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு, 7 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த 22ம் தேதி இரவு அதிமுக தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு அதிகாலை காரில் வீடு திரும்பிய விழுப்புரம் எம்பி ராஜேந்திரன், விபத்தில் சிக்கி பலியானார்.
இதற்கு மறுநாள் 24ம் தேதி சேலம் மின்னாம்பள்ளி அருகே கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காமராஜ் காயமடைந்தார். நேற்று முன்தினம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்ற காரும் விபத்தில் சிக்கியது. இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இப்படி அதிமுக தலைவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது கட்சியினர் மத்தியில் பரபரப்பையும், கிலியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அதிமுகவினர் கூறியதாவது:பாமக, பாஜகவினருடன் கூட்டணி ஏற்பட்டதில் இருந்து, அமைச்சர் மற்றும் எம்பிக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதிமுகவினருக்கு தற்போது நேரம் சரியில்லை என்பதையே இது காட்டுகிறது. எங்கு சென்றாலும், சுற்றி சுற்றி அடிக்கிறது. கடந்த 23ம் தேதி கூட, ஒரு அதிமுக எம்பி தாக்கப்பட்டுள்ளார். எனவே, தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அதிமுக தலைவர்கள் வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். அதேபோல் வேட்பாளர்கள், கட்சியினரும் ஜாக்கிரதையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும். ஒருவேளை பாமக, பாஜகவுடன், கூட்டணி அமைத்ததை ஜெயலலிதா ஆன்மா விரும்பாததால், இப்படி நடக்கிறதோ என தெரியவில்லை. அதிமுக பிரமுகர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதை தடுக்க ஏதாவது கோயிலில் பரிகார பூஜை செய்தால் கூட நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.