வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மாணவர்கள் முன்னேற்றம் அடையலாம்
2/21/2019 2:31:35 PM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்2 மாணவிகளுக்கான ‘’உன்னால் முடியும்’’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் இ.கே.லோகமணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உதயசூரியன் வரவேற்றார். சந்திராயன்-2 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று சாதனை மாணவிகள், சிறந்த ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது; பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவிகள் கிடைக்கும் வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டால் வாழ்வில் முதன்மை நிலையை அடைய முடியும். மாணவர்கள் ஆசிரியராகவும் மருத்துவராகவும், பொறியாளராகவும், விஞ்ஞானியாகவும் தங்களது எதிர்கால லட்சியத்தை அமைத்து கொள்ள கஷ்டப்படவேண்டும். இவ்வாறு பேசினார். விழாவில், கலாம் மாணவர்கள் எழுச்சி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. 1998-2000ம் ஆண்டில் பிளஸ்2 முடித்த மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணினி வழங்கப் பட்டது. விழாவில், வளரும் அறிவியல் நிறுவனர் சிவகுமார், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி, பெற்றோர் ஆசிரிய கழக செயலாளர் பாண்டியன், ரவிச்சந்திரன், சக்கரப்பன், அரசு வழக்கறிஞர் டில்லி, டாக்டர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் சசிகுமார் நன்றி கூறினார்.