அனுமதியின்றி கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
2/21/2019 2:23:22 PM
புழல்: போலீசாரின் அனுமதிபெறாமல் கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை புழல், மாதவரம் பால்பண்ணை, மணலி, செங்குன்றம், சோழவரம் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுநல சங்கங்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கு போலீசாரின் உரிய அனுமதி பெறப்படுவது இல்லை என்று தெரிகிறது.இதனால் அந்தந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் உளவுத் துறை போலீசாருக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து எவ்வித விவரங்களும் தெரிவதில்லை. இதன்காரணமாக கூட்டம் நடக்கும்போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் போலீசாருக்கு தெரிவது இல்லை. அசம்பாவிதம் தடுக்கமுடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
இதுபற்றி உளவுத்துறை போலீசார் கூறுகையில், ‘’ எந்த கூட்டம் நடத்தினாலும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அரசியல் பொதுக்கூட்டம் தவிர பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு யாரும் அனுமதி பெறுவது கிடையாது. இதனால் கூட்டம் நடக்கும் இடத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படும்போது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் அடிதடி உள்பட பல சம்பவங்கள் நடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் மக்களிடையே போலீசாருக்கு இருக்கும் நன்மதிப்பும் குறைகிறது. பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடத்தும்போது அதற்கான அழைப்பிதழை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பிறகு போலீசார் அனுமதி கொடுத்தபிறகுதான் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது கிடையாது. எனவே, அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தினால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது பொதுக்கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவேண்டும்’ என்றனர்.