பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திமுக கிராமசபை கூட்டம் மருத்துவ வசதிக்காக 15 கிமீ செல்ல வேண்டியுள்ளது
2/20/2019 2:53:05 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட திம்ம பூபாலபுரம், அரியத்தூர், வெள்ளாத்துக்கோட்டை ஆகிய 3 ஊராட்சிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டிகே.சந்திரசேகர் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி, துணைச் செயலாளர் குப்பன், மாவட்ட பிரதிநிதி கேசவன், சிவய்யா, இளைஞரணி அணி அமைப்பாளர் தில்லைகுமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள் பாலசுப்பிரமணி, சீனிவாசன், சுப்பிரமணி வரவேற்றனர். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசினர்.
இந்த கூட்டங்களில் பொது மக்கள் கூறும்போது, அரியத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னை உள்ளது. பஸ் வசதி இல்லை, குளம் தூர் வாரப்பட வேண்டும். உடைந்த நயப்பாக்கம் சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும், குப்பைகளை அகற்றுவது கிடையாது, கொஞ்சேரி பாளையத்தில் ரேஷன் கடை இல்லை’ என்றனர். அதேபோல திம்மபூபாலபுரம் கிராமத்தில், மருத்துவ சிகிச்சை பெற 15 கிமீ தூரம் உள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் கால்நடை மருத்துவமனையும் வேண்டும், ஓட்டேரி கிராமத்தில் சாலை வசதி இல்லை பெண்கள் பிரசவ நேரத்தில் உடனே மருத்துவமனை செல்ல முடியவில்லை. ஆம்புலன்சில் செல்லும் போதே பிரசவம் ஆகியுள்ளது. எனவே சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றனர். வெள்ளாத்துக்கோட்டையில், மின்சார வசதி இல்லை, பழுதடைந்துள்ள இருளர் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். மயான வசதி வேண்டும் என்றனர்.