சுண்ணாம்புகுளம் ஊராட்சியில் 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர்
2/20/2019 2:50:06 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்பு குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நேற்று 300 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சரணி தலைமை தாங்கினார். மேலாண்மை குழு உறுப்பினர்கள் சங்கர், பாஸ்கர், சரவணன், லதா முன்னிலை வகித்தனர். விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் முனிராஜசேகர், சேகர், பூவராகமூர்த்தி, கணக்காளர் சரஸ்வதி, ஆசிரியர் கிரிஜா, வனவிலங்கு காப்பாளர் சுப்பையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, தங்களது பள்ளியில் துவக்கப்பட்ட பசுமை படையின் சார்பில் சுண்ணாம்புகுளம் ஊராட்சி முழுவதும் 5000 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டு, பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதை தலைமையாசிரியர் சரணி அறிவுறுத்தினார். முதல்கட்டமாக, சுண்ணாம்புகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 300 மரக்கன்றுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நட்டனர். இதற்கான மரக்கன்றுகளை வனவிலங்கு அலுவலகம் மற்றும் சங்கர் என்பவரும் இலவசமாக வழங்கினர். முடிவில் சுமதி, ஹிதாயத் நிஷா, ஜனார்த்தனன் ஆகியோர் நன்றி கூறினர்.