திருவள்ளூர் அருகே சோகம் பைக்கில் இருந்து கீழே விழுந்த ஏட்டு பரிதாப சாவு
2/20/2019 2:49:41 PM
திருவள்ளூர்: ரோந்து பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பும்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த ஏட்டு, பரிதாபமாக இறந்தார். திருவள்ளூர் மாவட்டம் நத்தம்பேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (42). பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு தேவிகா என்ற மனைவியும், மோகன்ராஜ், சுவேதா என இரு பிள்ளைகளும் உள்ளனர். கணேசன், கடந்த 9ம் தேதி இரவு, ரோந்து பணியை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். நெமிலிச்சேரி பைபாஸ் சாலை மோரை கிராமம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கணேசனை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கணேசன் இறந்தார். இச்சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.