ஆர்.கே.பேட்டையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு
2/20/2019 2:45:03 PM
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் புதிய வட்டாட்சியர் அலுவலக திறப்பு விழா நடந்தது. 3 மணி நேரம் தாமதமாக திறப்பு விழா நடந்ததால் அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர். பள்ளிப்பட்டு வட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்கள் மற்றும் பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சிகள் உள்ளன. ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்பேரில், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் நேற்று மாலை திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், இதை திறந்து வைத்தார். திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். திருத்தணி ஆர்டிஓ பவணந்தி வரவேற்றார். அரக்கோணம் எம்பி கோ.அரி சிறப்புரையாற்றினார்.
திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், வட்டாட்சியர்கள் பள்ளிப்பட்டு சரவணன், ஆர்.கே.பேட்டை பாண்டியராஜன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் ேவலஞ்சேரி சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சீனிவாசன், பலராமன், பாண்டுரங்கன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சவுந்தரராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் ஜெயராமன், இளங்ேகாவன், சாந்தி பிரியா சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுலர்கள் ஸ்டாலின், சுவாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, நேற்று காலையில் இந்த புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என அறிவித்தனர். பிறகு இரவு 7 மணிக்குத்தான் திறப்பு விழா நடந்தது. 3 மணி நேரம் தாமதமானதால் அதிகாரிகளும், பொதுமக்களும் அதிருப்தியடைந்தனர்.