புதுவையில் 23ம் தேதி பாமக பொதுக்குழு
2/20/2019 2:44:09 PM
சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை புதுச்சேரி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெறும். கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
செயற்குழு கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொருளாளர், அணிகளின் மாநில செயலாளர், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். அதுபோல, புதுவை மாநிலத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கலாம். மக்களவை தேர்தலுக்கான பணிகள் குறித்து இந்த பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் 7மக்களவை, ஒரு மாநிலங்களவை எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.