பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்
11/29/2018 2:50:10 PM
பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் (பொறுப்பு) செயல் அலுவலராக இருந்த ஜானகிராமன் என்பவர் கட்டிடம் வரன்முறை ஒப்புதல் சான்று வழங்க 1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இதையடுத்து பேரூராட்சி புதிய (பொறுப்பு) செயல் அலுவலராக ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பேரூராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதன்பிறகு புதிய செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் பேசும்போது, ‘பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களின் பிரச்னைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அனைத்து ஊழியர்களும் தீவிர களப்பணியாற்ற வேண்டும்’ என்றார்.