நியூசிலாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
3/16/2023 6:03:16 PM
கெர்மாடெக்: நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கதாதல், அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள கெர்மாடெக் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அப்பகுதியை சுற்றிலும் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் குறிப்பிட்ட தீவுப் பகுதிகளில் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.