தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருது: சிறந்த குறும்படம், ஒரிஜினல் பாடல் பிரிவில் சாதனை
3/13/2023 5:43:01 PM
லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற இந்திய ஆவண குறும்படத்திற்கும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய திரைத்துறையினர், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று காலை 5.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், ரெட் கார்பெட்டில் கறுப்புச் சிலையாக வலம் வந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார். அதன் பின்னர் ஆஸ்கார் மேடையேறிய அவர், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையும் அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார்.
முக்கியமாக இந்தப் பாடலின் கோரியோகிரபி, யூடியூப்பில் வந்த வீவ்ஸ், ரீல்ஸில் ரசிகர்கள் ஆடிப்பாடியது என வரிசையாக அடுக்கினர். தீபிகா படுகோன் ஆர்ஆர்ஆர் பற்றி பேசும் போது ரசிகர்கள் அவரை பேசவிடாமல் ஆரவாரம் செய்தனர். விருது வழங்கும் நிகழ்வில் இந்தியாவின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சர்வதேச நடன கலைஞர்கள் ஆடினர். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை பிராண்டன் ஃப்ரஸெர் வென்றார். ‘தி வேஹ்ல்’ என்ற படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை மிசெல் இயோ, ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்துக்காக பெற்றார்.
மிசெல் இயோ, மலேசியாவை சேர்ந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. சிறந்த அனிமேஷன் படம் - குயில்லர்மோ டெல்ட்ரோஸ் பினோச்சியோ, சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்), சிறந்த துணை நடிகை விருது - ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்), சிறந்த ஆவணப் படம் - நாவல்னி, சிறந்த தழுவல் திரைக்கதை விருதை வுமன் டாக்கிங், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற படமும் பெற்றது. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருது ‘ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ படத்திற்கும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது ‘ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ படத்திற்கும் கிடைத்தது.
இந்தியாவை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியின் கதையை அடிப்படையாக கொண்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த ஆவண படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆஸ்கர் விருதை பெற்றனர். முதன் முறையாக இந்திய ஆவண குறும்படம் ஒன்று ஆஸ்கர் விருதை பெற்றதால் இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குனீத் மோங்கா கூறுகையில், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருதாகும்’ என்றார்.
அதேபோல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றனர். இந்திய குறும்படம், திரைப்படம் ஆகியவற்றிற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டதால், இந்திய சினிமா துறையும், திரைத்துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் முதல் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 2009ம் ஆண்டில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆங்கில படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளையும் அதே படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கிற்காக ரசூல் பூக்குட்டி ஒரு விருதையும் வென்றிருந்தனர். இதற்கு பிறகு இந்தியா, இந்த ஆண்டுதான் மீண்டும் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.