வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்ததால் அமெரிக்க வங்கி திடீர் மூடல்: 210 பில்லியன் டாலர் என்னாகும்? ஒரே நாளில் பங்கு வர்த்தகம் 70% வீழ்ச்சி
3/11/2023 5:52:49 PM
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ‘சிலிக்கான் வேலி’ வங்கிக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடியால், அந்த வங்கியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், அந்த வங்கியின் பங்கு வர்த்தகம் 70 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்தது.
கொரோனா காலத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. சாமானிய மக்களின் நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ‘சிலிக்கான் வேலி’ வங்கியில் வைப்புத் தொகை செலுத்திய வாடிக்கையாளர்கள், தொழில் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்து வருவதால், அந்த வங்கி தோல்வியை நோக்கி பயணித்தது. அதனால் அமெரிக்காவின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எஃப்.டி.ஐ.சி) நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ‘சிலிக்கான் வேலி’ வங்கியை மூட திடீரென உத்தரவிட்டுள்ளது.
மேலும், வங்கியின் மொத்த டெபாசிட் தொகையும் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் எடுத்துக் கொண்டது. சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்ட போது, அதன் சொத்து மதிப்பு 210 பில்லியன் டாலராக இருந்தது. வங்கியின் வைப்புத் தொகை 175.4 பில்லியன் டாலராக இருந்தது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் 2,50,000 டாலருக்கும் (சுமார் ரூ.2,05,04,637) அதிகமான வைப்புத்தொகையை, ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தனது கட்டுக்குள் கொண்டுவந்தது. சிலிக்கான் வேலி வங்கியின் பெரும்பாலான முதலீடு தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சிலிக்கான் வேலி வங்கியை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், கடந்த 2008ம் ஆண்டில் வாஷிங்டன் மியூச்சுவல் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியை போன்று இந்த வங்கிக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய இந்த பொருளாதார மந்தநிலையானது, அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சி.என்.பி.சி வெளியிட்ட அறிக்கையின்படி, ‘சிலிக்கான் வேலி’ வங்கியை மூட கலிபோர்னியா நிதி பாதுகாப்பு மற்றும் புத்தாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எஃப்.டி.ஐ.சி) வங்கியின் பெறுநராக நியமிக்கப்பட்டுள்ளது. வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கும் பொறுப்பும் எஃப்.டி.ஐ.சி.க்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் வேலி வங்கியானது, அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியாகும். இந்த வங்கிக்கு சுமார் 210 பில்லியன் டாலர் சொத்துகள் உள்ளன.
கடந்த 18 மாதங்களில், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதங்களை உயர்த்தியதால் இத்தகைய நிறுவனங்கள் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த வங்கியில் இருந்து ஏராளமான கடன்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது தங்களது முதலீடுகளில் அந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் இப்போது அமெரிக்க வங்கித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்கின்றனர். இதற்கிடையில், சிலிக்கான் வேலி வங்கியின் தாய் நிறுவனமான எஸ்.வி.பி பைனான்சியல் குழுமத்தின் பங்குகள், இன்று நியூயார்க் பங்குச் சந்தையில் அதன் வர்த்தகம் 70 சதவீதம் அளவிற்கு சரிந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.