அகமதாபாத்தில் இந்திய-ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸி. பிரதமருடன் போட்டியை ரசித்த மோடி
3/9/2023 6:28:11 PM
அகமதாபாத்: மதாபாத்தில் இன்று தொடங்கிய இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பார்வையிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருடன் அமைச்சர்கள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். முதலில், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஆண்டனி அல்பனிஸ், சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அவருடன் முதல்வர் பூபேந்திர படேலும் சென்றார். அங்கு ஆசிரமத்தை சுற்றி பார்த்து விட்டு புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் காந்தி சிலைக்கு மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து அகமதாபாத் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியை காண்பதற்கு இந்திய பிரதமர் மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிசுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இரு நாட்டு பிரதமர்களும் நேற்றே அகமதாபாத்துக்கு வந்து விட்டனர். இன்று காலை அகமதாபாத்தில் உள்ள உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 8.45 மணியளவில் வருகை தந்தார். அவரை கவர்னர் ஆச்சார்யா தேவவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் வருகை தந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், இருவரும் மைதானத்திற்குள் சென்றனர். அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் நின்றவாறு இருவரும் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் 4வது டெஸ்ட் போட்டியின் தொடக்க ஆட்டத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.