ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு
3/26/2023 5:06:33 PM
புதுடெல்லி: ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடியின் குடும்ப பெயரை (மோடி), குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுடன் தொடர்புபடுத்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பில், வயநாடு தொகுதி எம்பியான ராகுல்காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், மக்களவை செயலகம் ராகுல்காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட விசயத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறி பெரும்பாலான எதிர்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக நேற்று நிருபர்களை சந்தித்த ராகுல்காந்தி, அதானி குழுமத்திற்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்தும், இந்திய ஜனநாயகத்தை காக்க தான் தொடர்ந்து குரல் எழுப்பி வருவேன் என்றும், அதற்காக சிறை செல்லவும் அஞ்ச மாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று சத்தியாகிரக போராட்டங்களை நடத்தினர். தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற சங்கல்ப் சத்தியாகிரக போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய சத்தியாகிரக போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. முன்னதாக காங்கிரஸின் சத்தியாகிரக போராட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டதாகவும், ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி இருக்கும் இடத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அந்த குறிப்பிட்ட இடத்திற்கு பதிலாக ராஜ்காட் எதிரே உள்ள காந்தி தர்ஷன் நினைவிடத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் எங்களது குரலை அடக்கிய ஒன்றிய பாஜக அரசு, தற்போது மகாத்மா காந்தியின் சமாதியில் அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டம் நடத்த அனுமதிக்க மறுத்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது மோடி அரசுக்கு வழக்கமாகிவிட்டது. கொடுங்கோன்மை அரசுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்’ என்றார். காங்கிரஸ் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தால் தலைநகர் டெல்லியின் ராஜ்காட்டைச் சுற்றி அதிரடிப் படை, சிஆர்பிஎப் மற்றும் டெல்லி போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம்
இதேபோல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.
சென்னை
சென்னையில் காங்கிரஸ் சார்பில் 7 இடங்களில் சத்தியாகிரக அறப்போராட்டம் நடந்தது. மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் அண்ணாநகர் வளைவு முன்பு நடத்த சத்தியாகிரக போராட்டத்தில் டாக்டர் செல்லக்குமார் எம்பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் திருவொற்றியூர் காலடிப்பேடடை காந்தி சிலை அருகிலும் போராட்டம் நடந்தது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்தில் திருநாவுக்கரசர் எம்பி, கார்த்தி ப.சிதம்பரம் எம்பியும், வடசென்னை மேற்கு மாவட் தலைவர் டெல்லிபாபு தலைமையில் பெரம்பூர் மார்க்கெட் அருகில் நடந்த போராட்டத்தில் பொன்கிருஷ்ணமூர்த்தி, இமையா கக்கன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தென்சென்னை மத்தியம் மாவட்டம் தலைவர் எம.ஏ.முத்தழகன் தலைமையில் சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்பி, ஆ.கோபண்ணாவும். தென்சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் அடையாறு துரை தலைமையில் எஸ்ஐஇடி கல்லூரி முன்பு நடந்த போராட்டத்தில் கே.வி.தங்கபாலு, ஆர்.தாமோதரனும். தென்சென்னை மேற்கு மாவட்டத்தில் சார்பில் போரூர் ஈ.பி.அருகில் பொது செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். கடலூர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள காந்திசிலை முன்பு இன்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி மோடி அரசுக்கு எதிராகவும், ராகுல்காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டதற்கு எதிராகவும் கண்டன உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு காந்திசிலை எதிரில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகணேஷ் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
மதுரை முனிச்சாலை சந்திப்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் போராட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகரில் எம்ஜிஆர் சிலை அருகிலும், திண்டுக்கல் பெரியகடை வீதியிலும் அறப்போராட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு திடலில் உள்ள காந்தி சிலை முன்பு மாங்குடி எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடந்தது.
தேனி
தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கம்பம் சாலையில் மாவட்ட காங். தலைவர் கூடலூர் முருகேசன் தலைமையில் போராட்டம் நடந்தது.
இதுபோன்று ராமநாதபுரத்திலும் போராட்டம் நடந்தது.
ஈரோடு, கோவை
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே போராட்டம் நடந்தது. கோவை சிவானந்தாகாலனி டாட்டாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் மகாத்மா காந்தி படம் வைத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதேபோல் கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
டெல்டா மாவட்டங்கள்
நாகை அபிராமி அம்மன் சன்னதி தெரு, மயிலாடுதுறை சின்னக்கடை தெரு காந்தி சிலை முன் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில், கரூர் லைட்ஹவுஸ் காந்தி சிலை முன்பு, தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு, புதுக்கோட்டை திலகர் திடல் ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தது.
நெல்லை
நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சியினர் தச்சநல்லூர் காந்தி சிலையிடம், ராகுல் காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மனு அளித்தனர். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 1ம் கேட் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட காங்., தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஏபிசிவீ சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம், சுரண்டையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்பு மாவட்ட தலைவர் பழனிநாடார் எம்எல்ஏ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேலூர் மற்றும் குமரியிலும் போராட்டம் நடந்தது.