ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு
3/22/2023 5:44:52 PM
புதுடெல்லி: ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான கடைசி தேதி வரும் 31ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து நாடு முழுவதும் மக்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வந்தனர். இந்நிலையில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இந்த கால அவகாசத்தை ஒன்றிய அரசு நீடித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.