பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்
3/24/2023 5:37:39 PM
புதுடெல்லி: பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது என்று ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்பி அனில் தேசாய் கேட்ட கேள்விக்கு, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த எழுத்துப்பூர்வ பதில், ‘பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது சட்டப்பிரிவு 19(1) இன் கீழ் அவைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமையாகும். அதேநேரம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நீதிமன்ற அவமதிப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் ஆகியவற்றின் நலன்களுக்காக நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தை குறைத்தல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் போன்றவை தொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் தரப்பில் தாக்கல் செய்யப்படும் புகார்களை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) பரிசீலிக்கிறது. செய்தி டிவி சேனல் மற்றும் டிஜிட்டல் மீடியா இரண்டிற்கும் தனித்தனி வழிகாட்டுதல் நெறிமுறைகள் உள்ளன. பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது’ என்றார்.