பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
3/23/2023 5:20:13 PM
சூரத்: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ராகுல்காந்தி குற்றவாளி என 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, ‘எல்லா திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்ப பெயரை வைத்துள்ளனர்?’ என்று கேட்டதாக தெரிகிறது.
இதனடிப்படையில், ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கில், ‘ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தையும் ராகுல்காந்தி இழிவுபடுத்தி விட்டார்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் கடந்த 17ம் தேதி இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்தது. 23ம் தேதி, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பு அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அன்றைய தினம் ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றும் அவரது வழக்கறிஞர் கிரித் பன்வாலா தெரிவித்தார்.
அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜரானார். தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீர்ப்பை வாசித்தார். இதில், ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தொடர்ந்து அவர், 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வசதியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வெளியே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.