வைர வியாபாரியிடம் ரூ.60 லட்சம் வைர கற்கள் கொள்ளை 3 ஆண்டுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது
3/21/2023 5:57:49 PM
திருமலை: வைர வியாபாரியை ஏமாற்றி ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுமார் 3 ஆண்டுக்கு பிறகு கோவாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அல்மாஸ்பேட்டையை சேர்ந்தவர் காதர்பாஷா, வைர வியாபாரி. இவரிடம் 2020ம் ஆண்டு ஜனவரி 16ம்தேதி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ‘எங்களுக்கு அதிகளவு வைர கற்கள் வேண்டும், நாங்கள் கடப்பாவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளோம். இங்கு வந்தால் வியாபாரம் செய்து கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய காதர்பாஷா அவர்கள் தெரிவித்த லாட்ஜூக்கு வைரக்கற்களுடன் சென்றார். அங்கிருந்த கும்பல் திடீரென காதர்பாஷாவிடம் இருந்த சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரிம்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒரு சில நாட்களில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர், கொள்ளை கும்பலுக்கு துணையாக வந்தவர் என்பதும், கொள்ளை கும்பல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் முக்கிய குற்றவாளி கோவாவைச் சேர்ந்த இஸ்மாயில் ஷாகித் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவாவில் இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1 புஷ்ப ராகம், 3 வைர கற்களை பறிமுதல் செய்தனர். மேலும் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி பிடிபட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, மீதி வைரக்கற்கள் எங்கு உள்ளது என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.