மாமல்லபுரம் அருகே உயரழுத்த மின்வயர் அறுந்து விழுந்து தந்தை, மகன் பரிதாப சாவு: குடிநீர் கேன் வாங்க சென்றபோது பரிதாபம்
3/20/2023 5:42:33 PM
மாமல்லபுரம்: குடிநீர் கேன் வாங்க சென்றபோது உயரழுத்த மின் வயர் அறுந்து பைக் மீது விழுந்ததில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன் (42). ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவர், தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த வீடு கட்டி வசித்து வந்தார். கோதண்டராமனின் மகன் ஹேமநாதன் (12), மாமல்லபுரம் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்று, கோதண்டராமன் தனது வீட்டுக்கு குடிநீர் கேன் வாங்க தனது மூத்த மகன் ஹேமநாதனை பைக்கில் அழைத்து கொண்டு வடகடம்பாடி நோக்கி ஒத்தையடி பாதை வழியாக சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, அதிக மின்சாரத்தை கடத்தும் மின் வயர் திடீரென அறுந்து பைக்கில் சென்ற கோதண்டராமன், ஹேமநாதன் ஆகிய இருவர் மீதும் விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மின்சார துறை ஊழியர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து, இவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.