சட்டீஸ்கரில் நூதன முயற்சி கடனை அடைக்க காரை எரித்த தொழிலதிபர்: இன்சூரன்ஸ் பணத்துக்காக போட்ட திட்டம் பணால்
3/16/2023 6:01:27 PM
கான்கர்: சட்டீஸ்கரில் கடனை அடைப்பதற்காகவும், அதன் மூலம் இன்சூரன்ஸ் பணத்தை பெறலாம் என்ற திட்டத்துடன் காரை எரித்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்த ெதாழிலபதிபர் சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக சமீரன் சிக்தர் வங்கியிலும், நண்பர்களிடமும் ரூ. 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கொடுத்த கடனை திருப்பி கேட்டு வங்கிகளும், நண்பர்களும் அவருக்கு நெருக்கடி கொடுத்தன. என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த சமீரன் சிக்தர், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார்.
இதற்கான தவணை தொகையை முறையாக கட்டி வந்தார். ஆனால், கடன் நெருக்கடி மேலும் ஏற்பட்டதால் ஆயுள் காப்பீட்டு தவணையையும் செலுத்த முடியவில்லை. இருந்தும் தான் இறந்துவிட்டால் தனது குடும்பத்திற்கு ரூ.72 லட்சம் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்பதால், தான் இறந்ததாக நாடகம் ஆட முடிவு செய்தார். அதன்படி கடந்த 1ம் தேதி சமீரன் சிக்தரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் ஒரு காரில் சார்மா பகுதிக்கு சென்றனர்.
அங்கு, அவர் சென்ற காரை ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது போல் ஒரு கதையை உருவாக்கினார். பின்னர் அந்த காரை தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டார். வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால், அவர்கள் உறவினர்கள் இதுபற்றி கான்கர் போலீசில் புகார் செய்தனர். கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடிவந்தனர்.
தொடர் விசாரணையில், அவரது கார் சார்மா பகுதியில் இருந்தது. சமீரன் சிக்தர், அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அலகாபாத், பாட்னா, கவுகாத்தி, ராஞ்சி ஆகிய நகரங்களில் சுற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் தன்னை கண்டுபிடித்ததை அறிந்து கொண்ட சமீரன் சிக்தர், தனது சொந்த ஊருக்கு திரும்பினார். மேலும் தனது கடனை அடைப்பதற்கு இன்சூரன்ஸ் பணத்தை பயன்படுத்த தான் இந்த திட்டத்தை போட்டதாக உண்மையை போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.