கேரளாவில் அமில மழை: பொதுமக்கள் பீதி
3/16/2023 5:58:25 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் பல இடங்களில் நேற்று அமில மழை பெய்தது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொச்சி நகரத்தை ஒட்டி பிரம்மபுரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல நாட்களாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
இறுதியில் 13 நாட்களுக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதற்கிடையே தீ விபத்து காரணமாக பல நாட்களாக கொச்சியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிட்டது. மூச்சுத் திணறல் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தீ விபத்திற்கு பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கேரள உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது. கொச்சி மாநகராட்சியை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த சில நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன. பிளாஸ்டிக் உள்பட பல ரசாயன பொருட்கள் எரிந்ததால் தீ விபத்திற்கு பின் பெய்யும் முதல் மழை ஆபத்தானாக இருக்கும் என்றும், அமில மழை பெய்ய வாய்ப்புண்டு என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் விஞ்ஞானிகள் எச்சரித்தபடியே நேற்று கொச்சியில் அமில மழை பெய்தது. பல இடங்களில் கழிவுநீர் ஓடையில் வெள்ளை நிறத்தில் நுரை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.