மொத்த பணமோசடி வழக்கில் 96% வழக்கிற்கு தண்டனை: அமலாக்கத்துறை தகவல்
3/16/2023 5:54:33 PM
புதுடெல்லி: ெமாத்த பணமோசடி வழக்குகளில் 96% சதவீத வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2002ம் ஆண்டு இயற்றப்பட்ட பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் கடந்த 2005ம் ஆண்டு முதல் கடுமையாக்கப்பட்டது. இதுபோன்ற பணமோசடி விவகாரங்களை அமலாக்கத்துறை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணை காலத்தில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சொத்துக்களை முடக்கவும், அவர்களை கைது செய்யவும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில்:
பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா), தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (எஃப்இஓஏ) ஆகிய மூன்று சட்டங்களின் கீழான விவகாரங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேற்கண்ட சட்டங்களின் அடிப்படையில் முன்னாள், இன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் 2.98 சதவீதம் அளவிற்கே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை நடத்திய வழக்குகளில், 96 சதவீத வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளன.